கடமலைக்குண்டு,
கடமலைக்குண்டு அருகே அய்யனார்கோவில் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. எனவே கடமான்கள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங் களுக்கும் வருகின்றன. இந்த நிலையில் நேற்று 3 வயது மதிக்கத்தக்க பெண் கடமான் ஒன்று தண்ணீர் தேடி அய்யனார்புரம் அருகே உள்ள தோட்டத்துக்கு வந்தது.
அப்போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை பார்த்த பயத்தில், கடமான் மிரண்டு ஓடியது. அந்த வேளையில் மரத்தில் மோதி கால் பகுதியில் காயம் அடைந்து கடமான், தோட்டத்தில் படுத்து கிடந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள், கண்டமனூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த கடமானை மீட்டு, கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான் மூலம் கடமானுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் ரத்தம் அதிக அளவில் வெளியேறிதால் சிகிச்சை பலனின்றி கடமான பரிதாபமாக இறந்தது.
அதன்பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் கடமானின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு மலைப்பகுதியில் புதைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த 10-க்கும் மேற்பட்ட கடமான்கள் இறந்து போனது. இதனை தடுக்கும் வகையில் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.