மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்ய முயன்ற பெண் கொலை

துறையூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது. அப்போது, சமாதானம் செய்ய முயன்ற பெண் கொலை செய்யப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துறையூர், ஏப்.19-
துறையூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது. அப்போது, சமாதானம் செய்ய முயன்ற பெண் கொலை செய்யப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மோதல்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செல்லிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சாமி வீதிஉலாசெல்வதற்காகஅலங்கரிக்கப்பட்ட சுவாமி விக்கிரகத்தை டிராக்டரில் ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சிவகாமி (வயது 50) என்பவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஒரு தரப்பினர் சிவகாமியை பிடித்து கீழே தள்ளி உள்ளனர். இதில் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சிவகாமி மயங்கினார். சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்லிபாளையத்தில் திருவிழா நிறுத்தப்பட்டு, கோவில் மூடப்பட்டது.