மாவட்ட செய்திகள்

என் எல் சி சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம்

என் எல் சி சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வீடுகளை அகற்றாமல் எந்திரங்களுடன் அதிகாரிகள் திரும்பி சென்றனர்

மந்தாரக்குப்பம்

சுரங்க விரிவாக்கம்

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சுரங்கம்-1 விரிவாக்கத்திற்காக வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் நகர், பாலு பிரதர்ஸ் தெரு, கென்னடி நகர் ஆகிய பகுதிகளை கையகப்படுத்தி, வீடுகளை அகற்ற என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடும் எதிர்ப்பு

ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உரிய நிவாரணம் மற்றும் மாற்று இடம் வழங்கி அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்தால்தான் இந்த இடத்தை கொடுப்போம் என்று கூறி வருகிறார்கள். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.

இதனிடையே நேற்று காலை 9 மணி அளவில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் என்.எல்.சி. அதிகாரிகள் ஜீப்பில் வடக்குவெள்ளூர் பகுதிக்கு வந்தனர். மேலும் வீடுகளை இடிப்பதற்காக எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

வாக்குவாதம்

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ஒன்று திரண்டு என்.எல்.சி. அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் நிலத்தை தருவோம் என்று கூறினர்.

இதையடுத்து வீடுகளை அகற்றாமல் எந்திரங்களுடன் என்.எல்.சி. அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.