பெங்களூரு,
பல்லாரி அருகே முண்டரகி பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ் ஆச்சார்யா(வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், கீர்த்தன்(15) என்ற மகனும், ஸ்பூர்தி(12) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கணேசின் மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் கணேஷ் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து உள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் தான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று நினைத்த கணேஷ், குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் முண்டரகி கிராமத்திற்கு ஒதுக்குபுறமான இடத்தில் ஓடும் கால்வாய் அருகே கணேஷ், குழந்தைகள் கீர்த்தன், ஸ்பூர்தி ஆகியோரை அழைத்து சென்றார். பின்னர் கீர்த்தனையும், ஸ்பூர்தியையும் பிடித்து கால்வாயில் தள்ளிய கணேஷ் தானும் கால்வாயில் குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் கால்வாயில் குதித்து கீர்த்தனை உயிருடன் மீட்டனர். ஆனால் கணேசையும், ஸ்பூர்தியையும் மீட்க முடியவில்லை. இதுகுறித்து பல்லாரி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த பல்லாரி புறநகர் போலீசார், தீயணைப்பு படையினர் கணேஷ், ஸ்பூர்தியின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்பூர்தியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. கணேசின் உடல் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட ஸ்பூர்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லாரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கணேசின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து பல்லாரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.