மாவட்ட செய்திகள்

திருவண்டார்கோவிலில் கார் மீது லாரி மோதல்; கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்

திருவண்டார்கோவிலில் கார் மீது லாரி மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வில்லியனூர்,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெஸ்ருதீன் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான பெஸ்ருதீன் பிரசவத்துக்காக தாய் வீட்டில் இருந்து வந்தார். மனைவியை பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன் பிரவீன்குமார் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெஸ்ருதீனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு பிரவீன்குமார் காரில் அழைத்துச்சென்றார். அவர்களுடன் உறவினர்கள் ஆண்டனி பிலீப், சகாயமேரி, புஷ்பரேகா ஆகியோரும் வந்தனர்.

விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்டார்கோவில் மத்திய உணவு கிடங்கு அருகே வந்தபோது, புதுவையில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி மதுபாட்டில்கள் ஏற்றிவந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரில் சென்ற கர்ப்பிணி பெஸ்ருதீன், பிரவீன்குமார் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்இன்ஸ்பெக்டர் புனிதராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மீது லாரி மோதியதை தொடர்ந்து லாரியை அங்கேயே விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்களும், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் லாரியில் இருந்த மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக எடுத்துச்சென்றனர்.

SCROLL FOR NEXT