மன்னர்கள் தங்கள் படைகளின் முக்கிய பலமாக கருதியதும் குதிரைகளைத்தான். போர்க்களத்தில்தான் அவைகளின் முழு ஆற்றலும் வெளியே தெரியும். சமயோசிதமாகவும் நடந்துகொள்ளும். அதனால்தான் மகாராஜா ராணா பிரதாப் சிங்கின் குதிரையான சேத்தக் இன்றும் வரலாற்றில் வாழ்கிறது. மைசூர் மன்னர் ஹைதர் அலி தனது படைக்கு தேவையான குதிரைகளை தேர்வு செய்வதற்காகவே குதிரை சந்தையை உருவாக்கினார். 18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த குதிரை சந்தை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியம்தானே! இந்த ஆச்சரியத்தை காண வேண்டும் என்றால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதிக்கு செல்ல வேண்டும்.
புதுப்பாளையம் கிராமத்தில் மிகப்பழமையான குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருந்தேர் திருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 4 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டிதான் புகழ்பெற்ற குதிரைச்சந்தையும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் சமீபத்தில் நடந்து முடிந்தது.
ஈரோடு, நாமக்கல், கோவை, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்நாடக பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. மட்டை குதிரை, போனி குதிரை போன்ற சாதாரண வேலைகள் செய்யும் குதிரைகள் மட்டுமின்றி, கம்பீரமான குதிரைகளும் இந்த சந்தையில் அணி வகுத்து நின்றிருந்தன. இங்கு வந்த குதிரைகளில் அனைவரையும் கவர்ந்தது, கத்தியவார் குதிரைகள்தான். கத்தியவார் என்பது குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியில் இருக்கும் பகுதி. இந்த பகுதியை பூர்வீகமாக கொண்டவை கத்தியவார் குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்று மார்வார் என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவை மார்வார் குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 2 வகை குதிரைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன.
இந்த குதிரைகளை அதன் நிறத்தைவைத்து ரகம் பிரிக்கிறார்கள். சுத்த வெள்ளையாக இருக்கும் குதிரைகள் நொக்ரா என்று அழைக்கப்படுகின்றன. இந்த குதிரைகள் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கின்றன. செவலையில் வெள்ளை நிறம் ஆங்காங்கே இருந்தால் பஞ்சகல்யாணி, வெள்ளையில் கருப்பு நிறம் ஆங்காங்கே இருந்தால் கருப்பு சட்டை, கருப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளை நிறம் இருந்தால் வெள்ளை சட்டை என்றும் அழைக்கப்படுகின்றன. சுத்த கருப்பு நிறமும் உள்ளது. நிறத்தைவைத்து ரகம் பிரித்தாலும், கத்தியவார் குதிரைகளைத்தான் நமது விருப்பத்துக்கு ஏற்ப வேலை வாங்க பழக்க முடியும். எனவே மார்வார் குதிரைகளை விட கத்தியவார் குதிரைகளுக்கே மவுசு அதிகம் உள்ளது. இந்த ரக குதிரைகள்தான் சாகசங்கள், நடனம் ஆடும் பயிற்சிக்கு ஏற்றவையாகும்.
நமது நாட்டு பாரம்பரிய வேட்டை நாய்களாக இருந்த பல இனங்கள் அழிந்து விட்டன. அவற்றை மீட்டு எடுக்கும் பணியில் பலர் அக்கறைகொண்டிருக்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்டு தற்போது இனப்பெருக்கம் செய்யப்பட்டு வரும் முதலகவுண்ட், கன்னிங், சிப்பல்பரை, ராம் பிரவுன், கேரவன் போன்ற வேட்டை நாய்கள் அந்தியூர் சந்தையில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
தென் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட போயர் ஆடுகள், நீண்ட காதுகள் கொண்ட ஜமுனாபாரி என்ற ஆடு வகைகளும், கடக்நாத் எனப்படும் கருஞ்சதை கோழிகளும் இங்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.
குதிரை சாகச வீரர்கள் தங்கள் திறமையை காட்டும் வகையில் அங்கேயே குதிரையேற்ற சாகசம், ரேக்ளா வண்டி சாகசம் ஆகியவற்றையும் செய்து காட்டினார்கள்.
பொதுமக்களை எப்போதும் வெகுவாக கவர்வது நடனம் ஆடும் குதிரைகள்தான். இசைக்கு ஏற்ப 4 கால்களையும் அசைத்து ஆடும் குதிரைகள் 2 கால்களில் நின்று கொண்டு ஆடும் குதிரைகள், 4 சதுர அடி கட்டிலில் நின்று கொண்டு ஆடும் குதிரைகள் என்று வியக்க வைக்கும் குதிரைகளின் பின்னால் சென்று அவற்றை தொட்டுப்பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் அதிகம். கரு கரு என்று சுத்த கருப்பாக இருக்கும் குதிரைகளின் முன்பு நின்று கொண்டு செல்பி எடுக்கும் குதிரை பிரியர்கள், ஆ... இவ்ளோ குதிரைகளா என்று ஆச்சரியப்படும் குழந்தைகள்.. அதே வார்த்தைகளை அழகிய கண்களை விரித்து காட்டும் கன்னிப் பெண்கள் என்று புழுதிக்குள்ளும் அழகாகவே இருக்கிறது குதிரை சந்தை.
இந்த சந்தையை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தார்கள். வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குதிரைகள் வாங்கிச்சென்றார்கள்.
குதிரைகளையும், மாடுகளையும், ஆடுகளையும் பார்வையிடும் சந்தையாக இருந்தாலும் ஜாதி மத வேறுபாடுகள் இல்லாத தேசிய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் ஒரு விழாவாகவே அந்தியூர் குருநாதசாமி கோவில் குதிரைச்சந்தை திகழ்கிறது. ஒரு முறை இந்த சந்தையை பார்ப்பவர்கள், அடுத்த ஆண்டு எப்போது வரும் என்று ஏங்குவது வழக்கம்.