ஈரோடு தெற்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார் கலந்து கொண்டு பேசினார்.
சொத்து வரி உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப்பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இருசக்கர வாகனம் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு இறுதிச்சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, பொருளாளர் மர்ஹான் அகமது, அமைப்பு பொதுச்செயலாளர் ஐமால்தீன், பொதுக்குழு உறுப்பினர் ரபீக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், வர்த்தக அணி தலைவர் பஜ்லுல் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.