சேலம்,
விலை ஏற்றம்
கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி சேலத்தில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்குட்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள விற்பனை விலை நிலவரப்படி நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 26 காசுக்கு விற்பனை ஆனது. நேற்று 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 107 ரூபாய் 1 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த விலை இன்னும் சற்று அதிகமாக இருந்தது.
வாகன ஓட்டிகள் சிரமம்
அதே போன்று நேற்று முன்தினம் ரூ. 96.34-க்கு விற்ற டீசல் நேற்று 76 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 10 காசுக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.110.57-க்கு விற்பனையான பிரிமியம் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து நேற்று ரூ.111.32-க்கு விற்பனை ஆனது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 5 ரூபாய் 29 காசும், டீசல் 5 ரூபாய் 33 காசும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.