மாவட்ட செய்திகள்

பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பியது: பொதுப்பணித்துறை அதிகாரிகள்

பூண்டி, கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகள் முழுமையாக நிரம்பிய நிலையில், புழல் ஏரியில் 96 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 93 சதவீதமும், சோழவரம் ஏரியில் 81 சதவீதமும் நீர் இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

குடிநீர் வழங்கும் ஏரிகள்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு பருவ மழையால் நீர் வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 881 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 398 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,197 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

பூண்டி நூறு சதவீதம்

பூண்டி ஏரியில் நூறு சதவீதமும், சோழவரத்தில் 81.50 சதவீதமும், புழல் ஏரியில் 96.42 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் நூறு சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 93.22 சதவீதமும், வீராணம் ஏரியில் 81.74 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவான 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.) தற்போது 12 ஆயிரத்து 425 மில்லியன் கன அடி (12.42 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 93.70 சதவீதம் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 11 ஆயிரத்து 895 மில்லியன் கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.