மாவட்ட செய்திகள்

மைசூரு சர்க்கரை ஆலையில் ஆகஸ்டு 15-ந்தேதி முதல் உற்பத்தி தொடக்கம் - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்

மண்டியாவில் உள்ள மைசூரு சர்க்கரை ஆலையில் ஆகஸ்டு 15-ந்தேதி முதல் உற்பத்தி தொடங்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

மண்டியா,

மண்டியாவில் மைசூரு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலை நலிவடைந்தது. இதனால் கொள் முதல் செய்யப்பட்ட கரும்பு களுக்கு உரிய தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதைதொடர்ந்து மத்திய தொழில்துறை மற்றும் நிதித்துறை மைசூரு சர்க்கரை ஆலையில் உற்பத்தியை நிறுத்தும்படி கூறியது. அதன்பேரில் மைசூரு சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அந்த சர்க்கரை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கி வந்த விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மைசூரு சர்க்கரை ஆலையை திறந்து மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று விவசாயிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநில சர்க்கரை ஆலை துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மண்டியாவில் உள்ள மைசூரு சர்க்கரை ஆலையில் திடீரென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஆலை நிர்வாக அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மைசூரு சர்க்கரை ஆலை 3 ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்ததற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

அப்போது மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:-

மைசூரு சர்க்கரை ஆலையை திறக்கவும், உற்பத்தியை தொடங்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி முதல் மைசூரு சர்க்கரை ஆலையில் உற்பத்தி தொடங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். தற்போது ஆலையில் உள்ள கொள்கலன்கள் (பாய்லர்கள்) சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பழுதான கொள்கலன்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும்.

அத்துடன் ஆலையில் உள்ள எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதையும் பரிசோதித்து பார்க்க வேண்டியதுள்ளது. இந்த நடைமுறைகள் ஆகஸ்டு முதல் வாரத்தில் நடக்கும். மேலும் மைசூரு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையடுத்து 15-ந்தேதி முதல் சர்க்கரை உற்பத்தி தொடங்கப்படும்.

மைசூரு சர்க்கரை ஆலை நலிவடைந்த நிலையில் உள்ளது. இதனால் தனியார் நிறுவனத்திடம் ஆலையை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அந்த தனியார் நிறுவனம் ஆலையில் உற்பத்தியை மேற்கொள்ளும். மேலும் பராமரிக்கும் பொறுப்பையும் அந்த நிறுவனம் கவனித்துக்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் அஜய் நாகபூஷண், முன்னாள் மந்திரி எம்.எஸ்.ஆத்மானந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கர்நாடக ராஜ்ஜிய ரைத்த சங்கம் (கே.ஆர்.ஆர்.எஸ்.) சங்கத் தலைவர் தர்ஷண் புட்டண்ணய்யா, சம்புனஹள்ளி சுரேஷ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் மந்திரி கே.ஜே.ஜார்ஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், மைசூரு சர்க்கரை ஆலை மற்றும் பாண்டவபுராவில் உள்ள சககாரி சர்க்கரை ஆலைகளில் அரசு உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. அந்த இரு சர்க்கரை ஆலைகளையும் உடனே திறந்து உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT