திருச்சி, மே.5-
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான நேற்று திருச்சி மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி எடுத்தது, இரவில் மழை பெய்தது குளிர்வித்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் ஓடிந்தன.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகரில் எப்போதும் வெயிலுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாக திருச்சியை கந்தகபூமி என்று சொல்வதுண்டு. திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடந்த ஏப்ரல் மாதமே வெயில் சதத்தை தாண்டி இருந்தது.
கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கிறது.
பகலில் சுட்டெரிக்கும் வெயில்
மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதையொட்டி பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி 105.26 டிகிரியும், 2-ந் தேதி 103.01 டிகிரியும், 3-ந் தேதி 104 டிகிரியும், அக்னி நட்சத்திரம் தொடங்கிய நேற்று முதல் நாளில் அதிக பட்சமாக 105 டிகிரி வரை வெயில் பதிவாகி இருந்தது.
பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் அனல்காற்றும் வீசியது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்தனர். வெயிலின் உக்கிரம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நீடித்தது..
இரவில் குளிர்வித்த மழை
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் திரண்டன. சில நிமிடங்களில் எதிர்பாராத வகையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. பகலில் அனல்பறக்கும் வெயிலில் வாடிய மக்களுக்கு மாலையில் பெய்ய தொடங்கிய மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் மழைநீர் நிரம்பியதால், அவை பெருக்கெடுத்து சாலையில் சாக்கடை கழிவும், மழைநீரும் கலந்து ஓடியது.அதே வேளையில் சாலையோர வியாபாரிகள் திடீர் மழையால் பாதிக்கப்பட்டனர். காந்தி மார்க்கெட்டுக்குள் மழை நீர் பெருக்கெடுத்தது.
மரக்கிளைகள் ஓடிந்து விழுந்தன
இந்த மழையானது இரவிலும் நீடித்தது. காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதன் காரணமாக, மின் தடை ஏற்பட்டது. திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தில்லைநகர், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. மழை சற்று ஓய்ந்ததும் மின் பழுது பார்க்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
உப்பிலியபுரம்-தா.பேட்டை
உப்பிலியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூறாவளிகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதேபோல் தா.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கல்லக்குடி, சமயபுரம், லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மணப்பாறை
மணப்பாறை அருகே மருங்காபுரி தாலுகா பகுதியில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று இரவு இப்பகுதிகளில் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது.
கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது
திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள சில கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. உடனே அங்கு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்களை பீமநகர் வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இதேபோல் பலத்த மழைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலையின் நடுவே இருந்த மின்கம்பமும் சாய்ந்தது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதேபோல் கருமண்டபம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டு இருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.மணப்பாறை, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.