மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தொடர் மழை

நெல்லை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கோடை மழை பெய்தது. இந்த மழை நேற்று இரவு வரை நீடித்தது. அதாவது தினமும் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை காணப்படுகிறது. அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் சற்றும் அதிகரித்துள்ளது.

நெல்லையில் நேற்றும் பரவலாக பலத்த மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாகவும், அவ்வப்போது வெயில் முகமும் காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 3.15 மணி வரை தொடர்ந்து பெய்தது. தொடர்ந்து லேசான தூறல் இருந்தது.

தண்ணீர் தேங்கியது

இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அருகில், வடக்கு பகுதி மற்றும் சிந்துபூந்துறை சாலைத்தெரு தொடங்கும் பகுதி ஆகிய தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

மதுரை ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை, பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

தென்காசி, குற்றாலம் பகுதிகளிலும் வெயில் தாக்கம் கடுமையாக இருந்ததால் அருவிகளில் தண்ணீர் விழாமல் வறண்ட நிலை காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் கொட்டியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த பகுதியில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் மெயின் அருவியில் அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியிலும் தண்ணீர் விழுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று குற்றாலம் அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் -1, சேர்வலாறு -3, மணிமுத்தாறு -1, கருப்பாநதி -18, குண்டாறு -13, நம்பியாறு -3, கொடுமுடியாறு -20, அடவிநயினார் -5.

அம்பை -6, ஆய்குடி -15, சேரன்மாதேவி -7, பாளையங்கோட்டை -7, ராதாபுரம் -7, சங்கரன்கோவில் -7, செங்கோட்டை -3, சிவகிரி -4, தென்காசி -52, நெல்லை -5.30.