மாவட்ட செய்திகள்

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: போலீஸ் நிலையத்தில், சினிமா இயக்குனர் ரஞ்சித் ஆஜர்

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சினிமா இயக்குனர் ரஞ்சித், கோர்ட்டு உத்தரவின்பேரில் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் கடந்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித், தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்பு, ரஞ்சித் ஆஜரானார். அப்போது 3 நாட்கள் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரஞ்சித்துக்கு, நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று ரஞ்சித், திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

SCROLL FOR NEXT