புனே,
கோலாப்பூரை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் கடந்த 6 ஆண்டாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்ததால், ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த கோரி அவருக்கு நோட்டீஸ் வந்தது. இதன்படி அந்த டாக்டர் வருமான வரி அலுவலகம் சென்று அங்கு இருந்த வருமான வரி இன்ஸ்பெக்டரை சந்தித்து உள்ளார்.
இதில் டாக்டரிடம் ரூ.20 லட்சம் தந்தால் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதன்படி டாக்டர், வருமானவரி இன்ஸ்பெக்டரிடம் பேரம் பேசி ரூ.14 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் தருவதாக தெரிவித்தார். பின்னர் இது பற்றி டாக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் யோசனைப்படி அலுவலகத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.