மாவட்ட செய்திகள்

2 வீடுகளில் ரூ.6 லட்சம் நகை- பணம் கொள்ளை

அரகண்டநல்லூர் பகுதியில் நடந்த தனித்தனி சம்பவத்தில் ரூ.6 லட்சம் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 51). சாக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. மேலும் மற்றொரு அறையில் இருந்த பீரோவை மர்மநபர்கள் கவனிக்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போகாமல் தப்பியது.

மற்றொரு சம்பவம்

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலன் ( 33). விவசாயி. இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து வடிவேலன் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரகண்டநல்லூரில் அடிக்கடி நடைபெற்று வரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.