கரூர் 
மாவட்ட செய்திகள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

குருபெயர்ச்சி விழா

குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிகாலை 4.16 மணிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு பஞ்சாமிர்தம், பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் குருபகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து குருபகவான் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், கொண்டை கடலை மாலை அணிவித்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள்

பின்னர் குருபகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் நவக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர்.

தோகைமலை

தோகைமலை அருகே ஆர்.டி.மலை மலை மீதுள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலிலுள்ள குருபகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அதேபோல் நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை கோவில் வளாகத்திற்குள் அக்னிகுண்டம் வைத்து புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர். அங்குள்ள குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பரிகார ராசிகளுக்கு பரிகார பூஜை நடைபெற்றது.