வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், நிமோனியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த புதுமை முயற்சியாக ஷாம்பூ பாட்டில்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அவர் பெயர் முகம்மது ஜோபைர் சிஸ்டி. இவர், வங்காளதேசத்தின் சில்ஹெட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவில் கடந்த 1996-ம் ஆண்டு பணிபுரிந்தார்.
தனது பயிற்சிக்காலத்தின் முதல்நாள் இரவில் நிமோனியாவால் மூன்று குழந்தைகள் இறந்ததைப் பார்த்து சிஸ்டி வேதனை அடைந்தார். நிமோனியாவால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அன்றே உறுதிபூண்டார்.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 9.20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் இறக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை, தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவை.
இந்நிலையில், சுமார் இருபதாண்டு காலம் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆயிரக் கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் மலிவு விலை சாதனத்தை டாக்டர் சிஸ்டி கண்டுபிடித்திருக்கிறார்.
நிமோனியா நுரையீரலைப் பாதிக்கிறது. ஸ்டிரெப்டோகாக்கஸ் அல்லது நுரையீரல் சின்சைடியல் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நுரையீரலைப் பாதிக்கின்றன.
இதனால் நுரையீரல் வீங்குவதுடன், திரவத்தால் நிரம்புவதால் சுவாசத்தின்போது ஆக்சிஜனை உள்ளிழுக்கும் நுரையீரலின் திறனும் குறைகிறது.
வளர்ந்த நாடுகளில் நிமோனியா பாதித்த குழந்தைகளின் சுவாசத்துக்கு செயற்கை சுவாசக் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இக்கருவி ஒன்றின் விலை சுமார் 10 லட்ச ரூபாய் என்பதுடன், சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களால்தான் அதை இயக்க முடியும். வங்காளதேசம் போன்ற வளரும் நாடுகளுக்கு அது செலவு பிடிக்கும் விஷயம்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்த மருத்துவர் சிஸ்டி, அப்போது குமிழி சி.பி.ஏ.பி. சாதனத்தைப் பார்த்துள்ளார்.
அது தொடர்ச்சியான சுவாசவழி அழுத்தத்தைப் பயன்படுத்தி நுரையீரல் உருக்குலைவதைத் தடுத்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை உட்கிரகிக்க உதவும். ஆனால் அதன் விலை அதிகம்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசத்துக்கு சர்வதேச வயிற்றுப்போக்கு நோய் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய மருத்துவர் சிஸ்டி திரும்பிவந்தார். அப்போது, எளிமையான, விலை மலிவான குமிழி சி.பி.ஏ.பி. சாதனத்தை உருவாக்குவது பற்றிய ஆய்வில் அவர் ஈடுபட்டார்.
சிஸ்டியும், அவரது சக மருத்துவரும் இணைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தூக்கி எறியப்பட்ட காலி பிளாஸ்டிக் ஷாம்பூ பாட்டிலில் நீர் நிரப்பி அதன் ஒருபுறத்தில் பிளாஸ்டிக்காலான சப்ளை டியூப்களை பொருத்தினார்கள்.
குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து ஆக்சிஜனை உட்கிரகித்து, ஷாம்பூ பாட்டிலில் பொருத்தப்பட்ட டியூப் வழியாகச் சுவாசத்தை வெளிவிடும்போது நீரில் குமிழிகள் தோன்றும் என்று அவர் விளக்குகிறார்.
அந்தக் குமிழிகளில் இருந்து ஏற்படும் அழுத்தம், நுரையீரலின் சிறிய காற்றுப் பைகளைத் திறக்கிறது.
45 நோயாளிகளிடம் இதை அவ்வப்போது பரிசோதித்தோம். சில மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது என்கிறார் சிஸ்டி.
குறைந்த ஓட்ட ஆக்சிஜனில் சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது, குமிழி சி.பி.ஏ.பி. சாதனம் மூலம் சிகிச்சை பெற்றவர்களின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
வெறும் 80 ரூபாய் மதிப்புள்ள இந்தச் சாதனம், நிமோனியா இறப்பு விகிதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
ஆக்சிஜனை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் இச்சாதனத்தால், மருத்துவமனையின் ஓராண்டு ஆக்சிஜனுக்கான செலவு சுமார் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகக் குறைந்துள்ளது.
இதுபற்றிய நாடு தழுவிய ஆய்வு இன்னும் தேவைப்படும்போதிலும், முடிவுகள் ஊக்கமளிக்கின்றன என வங்காளதேச அத்தின் மகளிர் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் துறை பேராசிரியர் டாக்டர் அர்ம் லுத்பல் கபீர் கூறுகிறார்.
எந்தவொரு மருத்துவமனையாலும் இந்தச் சாதனத்தை வாங்கமுடியும் என்பதால், இறப்பு விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கும் பேராற்றலை இது கொண்டுள்ளது என்று நினைக்கிறேன் என்கிறார் அவர்.
இந்த மலிவு விலை உயிர் பாதுகாப்பு சாதனத்தால் இதுவரை சுமார் 600 குழந்தைகள் பயனடைந்துள்ளன.
இந்தச் சாதனத்தை உருவாக்கிய மருத்துவர் சிஸ்டி, வளரும் நாடுகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இது இருக்க வேண்டும். அப்போது நிமோனியாவால் ஏற்படும் இறப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும் என்கிறார்.
எண்ணற்ற உயிர்களைக் காத்த புதுமை முயற்சிக்கு நாமும் நமது வாழ்த்துகளைச் சொல்லிவிடலாம்!