வாணியம்பாடி,
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா, வேலமரத்து வட்டம், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பெரியகுழந்தை, பெருமாள், செல்வராஜ், கோவிந்தராஜ், ரங்கசாமி, துரைராஜ், திருப்பதி, சுந்தர், செல்வம், லோகநாதன், முருகன், ராஜாமணி, பலராமன் உள்பட 23 பேர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் மாவட்டத்துக்கு சென்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியை சேர்ந்த ஏஜெண்டு மூலம், இவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் என்று கூறி வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு ஒருமாத சம்பளம் ரூ.9,500 மட்டுமே கொடுத்துள்ளனர். பின்னர் எந்தவிதமான சம்பளமும் தராமலும், வேளைக்கு உணவு தராமலும் கொடுமைபடுத்தி உள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்களை காப்பாற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறையின் தூதரக அலுவலக அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல்வாழ்வு இயக்குனரகத்தின் ஆணையர் ரமேஷ் பொன்ராஜ் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோரின் முயற்சியின் பேரில் முதற்கட்டமாக 7 பேரை மீட்டனர். மேலும் 16 பேரை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 7 பேரும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ் மூலம் சொந்த ஊரான மல்லகுண்டாவிற்கு திரும்பினர். வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வந்து இறங்கிய அவர்களை தாசில்தார் முரளிகுமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து தாசில்தார் தனது ஜீப்பில் அவர்களை ஏற்றி சென்று அவர்களது வீடு முன்பு இறக்கிவிட்டார். வீடு திரும்பிய அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.