கிருஷ்ணகிரி:
தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
தேய்பிறை அஷ்டமி
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சூரன்குட்டை
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் சூரன்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.