தென்காசி:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தலை தடுக்க வலியுறுத்தி, புளியரையில் வருகிற 16-ந்தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல், ஜல்லி கற்கள் போன்ற கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமையில், வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் கங்காதேவி தலைமை தாங்கினார்.
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திட்டமிட்டபடி 16-ந்தேதி சாலைமறியல்
கூட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி தான் லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றி செல்லப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படவில்லை. லாரிகளில் கடத்தி செல்லப்படும் கனிமவளங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தால், அவற்றை எடுத்த இடத்திலேயே மீண்டும் கொட்டுவதில்லை. கனிமவள கடத்தலில் ஈடுபடுகிறவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரவில்லை என்று கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படாததால் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி புளியரை சோதனைச்சாவடியில் வருகிற 16-ந்தேதி சாலைமறியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.