மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்,

25 சதவீத இடஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி. மற்றும் டி.என்.சி. பிரிவை சேர்ந்தவர்கள்), வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் (ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை) நலிவடைந்த பிரிவினரின் (பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள்) குழந்தைகளுக்கு ஆரம்பநிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.

பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 63 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 609 இடங்கள் ஆர்.டி.இ. 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் படி பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இம்மாணவர் சேர்க்கைக்கு குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகம், வட்டார வளமைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றோர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.