மாவட்ட செய்திகள்

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் திடீர் மண் சரிவு

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழனி:

கொடைக்கானல் மலைப்பாதை

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக மலைப்பாதைகள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பழனி மலைப்பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு கொடைக்கானல் செல்பவர்களும் இந்த பாதை வழியாக செல்கின்றனர். எனவே தொடர் விடுமுறை, விசேஷ நாட்களில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம்.

மண் சரிவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழனி, கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலையில் பழனி, கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தது. இதற்கிடையே நேற்று அதிகாலை 5 மணி அளவில் சவரிக்காடு 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

அப்போது மண் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

மண்சரிவு குறித்து பழனி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இடையூறாக கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழை நேரங்களில் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.