மாவட்ட செய்திகள்

சுவையான சுவாரசியங்கள் : ஆள் மாறாட்டம்

அமெரிக்காவில் வசிக்கும் ஆடம் டேனியல், மிகவும் பிரபலமான மனிதராக வலம் வருகிறார். பாப் பாடகி மடோனாவைப் போல ஆடம் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டார்.

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் வசிக்கும் காலும் சாம்பர்லைன், ஒரு பட்டதாரி. இவர் பெரிய பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து முடித்திருந்தாலும், இதுவரை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் மூலம் எத்தனையோ வேலைகளுக்கு முயற்சி செய்தார். அப்படியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இதையடுத்து பர பரப்பாக இருக்கும் மான்செஸ்டர் பகுதியில், நடுத் தெருவில் நின்றுகொண்டு வேலை தேட ஆரம்பித்து விட்டார்.

நான் ஒரு பட்டதாரி. எனக்கு ஏற்ற வேலை தாருங்கள் என்று ஓர் அட்டையைப் பிடித்தபடி மணிக்கணக்கில் நின்றுகொண்டிருக்கிறார். பெரும்பாலானவர்கள் புன்னகை செய்து, நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறிச் செல்கின்றனர். இதுவரை 5 ஆயிரம் மக்களைச் சந்தித்திருக்கிறார். அதில் 40 பேர் தகுந்த வேலைக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை.

வேடிக்கையான பொழுதுபோக்கு

அமெரிக்காவில் வசிக்கும் 37 வயதான ஜாமி ஜாக்சனுக்கு, பூங்கொத்துகளைச் சேகரிப்பது பொழுதுபோக்கு.

திருமணங்களில் மணப்பெண் கையில் இருக்கும் பூங்கொத்தை, தூக்கிப் போட்டுப் பிடிப்பது ஒரு சம்பிரதாயம். அப்படித் தூக்கிப் போடும் பூங்கொத்துகளைச் சரியாகப் பிடித்து, தன் வீட்டு அலமாரியில் கொண்டு வந்து வைத்துவிடுகிறார் ஜாமி. 1996ம் ஆண்டில் இருந்து இப்படி பூங்கொத்துகளைச் சேகரித்து வரும் ஜாமியிடம் இதுவரை, 46 பூங்கொத்துகள் உள்ளன. 50 பூங்கொத்துகளைச் சேர்ப்பதுதான் அவருடைய நோக்கமாம். இத்தனைப் பூங்கொத்துகளைச் சேகரித்தாலும், ஜாமி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

நான் செல்லும் திருமணங்களில் எல்லாம் பூங்கொத்து எனக்கே கிடைத்துவிடாது. சில நேரங்களில் வேறு யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதனால் போட்டிப்போட்டால் மட்டுமே பூங்கொத்தைப் பிடிக்க முடியும். இதற்காகவே தெரிந்தவர், தெரியாதவர் என எல்லா திருமணங்களுக்கும் சென்றுவருகிறேன். விரைவில் 50 பூங்கொத்துகளை சேகரித்துவிடுவேன் என்று உற்சாகமாக பேசுகிறார்.

மொபைல் போன் அருங்காட்சியகம்

ஸ்லோவாகியாவைச் சேர்ந்தவர் 26 வயதான ஸ்டீபன் போல்காரி. இவர் இதுவரை 3,500 மொபைல் போன்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். 15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு மொபைல் போன்கள் மீது அதிக ஆர்வம். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு பிராண்ட் மொபைல் போனும் புதிய தகவல்களை இவருக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மொபைல் போன்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய போன்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் 1,000 போன்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். பிறகு தன்னுடைய சேமிப்பில் இல்லாத போன்களை மட்டும் தேடித் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்று 1,231 மாடல்களில் 3,500 மொபைல் போன்கள் இவரிடம் இருக்கின்றன.

செங்கல் போன்று இருந்த நோக்கியா 3310 மாடலில் இருந்து தொடு திரை ஸ்மார்ட் போன்கள் வரை, குறுகிய காலத்தில் மொபைல் போன்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது என்கிறார் ஸ்டீபன் போல்காரி. இவரது வீட்டிலேயே மொபைல் போன் அருங்காட்சியகத்தை வைத்திருக்கிறார். சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் மொபைல் போன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம்பெற்றிருக்கிறார்.

ஆடம்பர பிச்சைக்காரர்

46 வயதான லீ என்பவர், தினமும் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு காரில் பீய்ஜிங் ரெயில் நிலையத்திற்குச் செல்கிறார். கழிவறைக்குச் சென்று, பத்து நிமிடங்களில் ஊனமுற்ற பிச்சைக்காரராக உருமாறி வெளியே வருகிறார்.

காலை முதல் மாலை வரை ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்துவிட்டு, மீண்டும் தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு காரில் கிளம்பிவிடுகிறார். காலை காரில் வந்து இறங்குவது, பிச்சை எடுப்பது, மாலை காரில் வீடு திரும்புவது என பிசியாக இருந்த லீயை, காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணையில், சார்... பிச்சைக்கார வேலையில் பெரிதாக ஒன்றும் சம்பாதித்துவிடவில்லை. நான்கு அடுக்குமாடி வீடுகளை மட்டுமே கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறேன். என்னைக் கைது செய்துவிடாதீர்கள். தனி வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று விடும் என்று அழுது கதறியிருக்கிறார். இருப்பினும் காவல்துறை தனது கடமையை செய்திருக்கிறது. ஆம்! லீ இப்போது போலீஸ் லாக்கப்பில் இருக்கிறார்.

# ஆயுசு முழுக்க உழைச்சும், வீட்டு வாடகை கூட கட்ட முடியலடா எங்களால..

SCROLL FOR NEXT