மாவட்ட செய்திகள்

காவிரியில் தண்ணீர் கேட்பதை தடுக்க டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முயற்சிகள் தொடர்கிறது

காவிரியில் தண்ணீர் கேட்பதை தடுக்க டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முயற்சிகள் தொடர்கிறது என்று, கதிராமங்கலத்தில் டி.ராஜேந்தர் கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மண், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை உண்பது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் கிராம மக்களை டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி., ஜி.கே.வாசன், விஜயகாந்த் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து மக்களின் காத்திருப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சிலர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று கதிராமங்கலம் கிராமத்துக்கு லட்சிய தி.மு.க. தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் வந்து உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ராஜேந்திரன், அமுதா, மக்கள் சேவை இயக்க தேசிய தலைவர் தங்கசண்முக சுந்தரம், மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கதிராமங்கலத்தில் பாலைவனத்தில் செய்ய வேண்டிய ஆய்வுகளை மக்கள் வாழும் பகுதியில் செய்கின்றனர். பாலைவனங்களில் கூட சக்தி வாய்ந்த பைப்புகளை பூமிக்குள் புதைப்பதில்லை. மேல் பகுதியில் தான் பைப்புகள் புதைக்கப்படுகின்றன. தரமற்ற பைப்புகளாலும், மண் அரிப்பாலும் பைப்புகள் எளிதில் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் மேல் பகுதியில் அமைக்கப்படும் பைப்புகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சரி செய்து விடலாம். ஆனால் பூமிக்குள் புதைக்கப்படும் பைப்புகளில் பிரச்சினை ஏற்பட்டால் எப்படி கண்டறிவார்கள். இதனால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. சோலைவனம் எல்லாம் பாலைவனமாக்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம், கல்பாக்கம் அனல்மின்நிலையம் போன்றவை பன்னாட்டு முதலாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தான் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அணுஉலை அமைக்க ரஷ்யாவுடன் 1988ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ரஷ்யாவில் செர்னோபில் என்ற இடத்தில் 1986ம் ஆண்டு அணுஉலை மின் நிலையத்தில் விபத்து நடந்த பிறகு எதற்காக ஒப்பந்தம் போடுகிறார்கள்?

நமது மாநிலத்தில் இத்தகைய ஆய்வு பணிகளை ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதிகளிலும், நிலப்பகுதிகளிலும் மேற்கொள்கின்றனர். இதனால் கடலில் மீன்கள் வாழமுடியவில்லை. மீனவர்கள் வாழ முடியவில்லை. விவசாயிகளும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற ஆய்வுகள் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி விட்டால் கர்நாடக மாநிலத்திடம் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்க மாட்டார்கள் என மத்திய அரசு கருதுகிறது. எனவே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பதை தடுக்க டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சிகள் தொடர்கிறது.

பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெண்களை பார்த்து டி.ராஜேந்தர் கண்ணீர் வடித்தார். பின்னர் தொட்டிலில் தூங்கிய குழந்தையை பார்த்து ஒரு திரைப்பட பாடலை ராகத்துடன் பாடினார். கதிராமங்கலத்தில் நேற்று மக்கள் சேவை இயக்கத்தினர் தலை பகுதியில் முள்ளை வைத்து கொண்டு போராடினர். அப்போது அவர்கள் டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆய்வால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு நெல் விளைச்சலுக்கு பதில் முள் விளைச்சல் தான் இருக்கும் என கூறி முள்ளை உண்பது போல நடித்துக் காட்டினர்.