மாவட்ட செய்திகள்

நெய்வேலியில் பஸ் கண்டக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

நெய்வேலியல் பஸ்கண்டக்டர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நெய்வேலி,

நெய்வேலி 21-வது வட்டம், ஏ.டி.எஸ். தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நெய்வேலி பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(26). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கருத்துவேறு பாடு காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை நடந்து வந்தது. கடந்த 29-ந் தேதியும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அறையின் உள்ளே தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த நெய்வேலி தெர்மல் போலீசார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

மகாலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.