மாவட்ட செய்திகள்

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்ற உத்தரவிடாத மத்திய அரசு குற்றவாளி

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்ற உத்தரவிடாத மத்திய அரசு குற்றவாளி என்று திருநாவுக்கரசர் கூறினார்.

செம்பட்டு,

கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு உள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு அளித்த பின்னரும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுக்கிறது என அம்மாநில அரசை குற்றம் சாட்டுவது தவறு.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தாலும், பாரதீய ஜனதா அரசு இருந்தாலும் காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நடுவர் மன்ற உத்தரவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை அளித்து உள்ளது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த உத்தரவிடவேண்டியது மத்திய அரசு தான். மத்திய அரசு உத்தரவிட்டால் அதனை கர்நாடக மாநில அரசு நிறைவேற்றி தான் ஆக வேண்டும். ஆனால் இன்னும் உத்தரவிடாத மத்திய அரசு தான் குற்றவாளி. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து 4 வாரங்கள் முடிந்து விட்டது.

இன்னும் 2 வாரங்கள் தான் நிலுவையில் உள்ளது. தீர்ப்பை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழக அரசு பாரதீய ஜனதாவின் பினாமி அரசாக செயல்படுவதால் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி இருக்க கூடாது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் இதுபோன்ற யாத்திரைக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் கோழைத்தனமானது.

எந்த ஒரு சிலையாக இருந்தாலும் அதனை உடைப்பது என்பது கேவலமான செயலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.