சிதம்பரம்
சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளின் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினமும் நகராட்சி ஊழியர்களால் சேமிக்கப்படும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. துப்புரவு பணியாளர்கள் மக்காத மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்து, நகராட்சி மூலம் விற்பனை செய்து அதற்கான தொகையை நகராட்சி பணியாளர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிதம்பரம் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்ட மக்காத மறுசுழற்சி செய்யகூடிய 12 டன் பிளாஸ்டிக் குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டது.
பின்னர் அந்த குப்பைகள் அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் ஜெகதீசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். மக்கும் குப்பைகளை நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே இயற்கை உரமாக மாற்றுவதற்கு கட்டுமான பணிகளும், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆணையாளர் ஜெகதீசன் கூறுகையில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும். உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வழங்குவோர் மீது நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் சிதம்பரம் நகரம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் தேங்கி மாசுபடுவது தவிர்க்கப்படும் என்றார்.