சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணிகளை ஒவ்வொரு ஒன்றியங்கள் வாரியாக கலெக்டர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இளையான்குடி பகுதியில் ஆய்வு செய்தார். இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர், எஸ்.புதூர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் புழுதிப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை சேமிக்கப்படும் இடத்தினை ஆய்வு செய்தார். இதனையடுத்து செட்டிக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்து, வாரம் ஒருமுறை குடிநீர் தொட்டியினை சுத்தம் செய்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று பணியாளர்களை அறிவுறுத்தினார். மேலும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் எஸ்.புதூர் மத்திய கூட்டுறவு வங்கி, திருப்பத்தூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்தார். இதேபோல் எஸ்.புதூர், கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக செயல்படுத்துமாறு வங்கி ஊழியர்களை கேட்டுக்கொண்டார். மேலும் வேளாண்மை துறை அலுவலர்களிடம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், வருகிற 30-ந்தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.