விருதுநகர்,
மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது தொகுதியை மேம்படுத்தும் வகையில் தேவைகளின் அடிப்படையிலும், மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும் திட்டப்பணிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடியும், சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.2 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் மாவட்டத்திலுள்ள விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஆகிய 4 பகுதிகளிலும் நடப்பு நிதியாண்டிற்கான தொகுதி மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற வேண்டும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இந்த நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டு பணிகள் முடக்கமடைந்துள்ளன.
வழக்கமாக தொகுதி மேம்பாட்டு பணிக்கான நிதி ஒதுக்கீடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் வழங்கப்படும். ஊரக வளர்ச்சி முகமை பணிகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, மதிப்பீட்டின்படி நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால் விருதுநகர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.5 கோடி திட்டப்பணிகளுக்கான விவரங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைத்து விட்டதாக எம்.பி. தரப்பில் கூறியுள்ள போதிலும் ஊரக வளர்ச்சி முகமை இதுவரை 20 சதவீத பணிகளுக்கு மட்டுமே நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விதிமுறைப்படி அந்தந்த நிதியாண்டிற்கான திட்டப்பணிகளை நிதியாண்டு முடிவதற்கு முன்பு முடிக்க வேண்டும்
ஆனால் தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள், நடப்பு நிதியாண்டு இறுதிக்கட்டத்திலும் முற்றிலுமாக முடிவடையாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகனை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரான மாணிக்கம் தாகூர் எம்.பி. இத்திட்டப்பணிகள் விரைந்து முடிவடைய உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.