கோட்டக்குப்பம்,
புதுச்சேரி நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது24) பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வீரமணி, நண்பர்களுடன் இருக்கிறேன் சீக்கிரம் வந்து விடுகிறேன் என கூறினாராம். இரவில் அவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார்சாவடி தீப்பாய்ந்தான் கோவில் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து திடீரென வீரமணியை அவரது நண்பர்கள் மீன்வெட்டும் பெரிய கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத வீரமணி உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அவரது நண்பர்கள் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள். இதில் தலையில் 5க்கும் மேற்பட்ட வெட்டுக்கள் விழுந்தன. இதனால் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே வீரமணி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதய ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று வீரமணியின் பிணத்தை கைப்பற்றி தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்த நண்பர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
படுகொலை செய்யப்பட்ட வீரமணிக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக நண்பர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் வீரமணியை அவரது நண்பர்களான முத்தியால்பேட்டையைச் சேர்ந்த குமரேசன் (23), மற்றும் கூட்டாளிகள் மணவாளன்(25), ஏழுமலை(25)ஆகியோர் மது குடிக்க அழைத்து சென்று மீன்வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.