மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை பழ.நெடுமாறன் உள்பட 438 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பழ.நெடுமாறன் உள்பட 438 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

காவிரி இறுதித்தீர்ப்பை ஒழித்து கட்டும் வகையில், ஒற்றை தீர்ப்பாயத்தை அமைக்க முடிவு செய்த மத்திய அரசை கண்டித்தும், கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை கண்டித்தும், மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்தும் மற்றும் மத்தியஅரசின் இந்தி திணிப்பு கொள்கையை கண்டித்தும் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழர்அமைப்புகள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை தமிழர்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், துணைத்தலைவர் பொன்னிறைவன், தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்தேச மக்கள் கட்சி தமிழ்நேயன், காவிரிஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட ஏராளமானோர் கையில் கொடிகளுடன் திருச்சி வருமான வரித்துறை அலுவலகம் அருகே திரண்டனர்.

அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இது பற்றி ஏற்கனவே தகவல் அறிந்து அங்கு போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தின் முன்பு இரும்பு தடுப்புகளை வைத்து யாரும் உள்ளே நுழைந்துவிடாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வருமானவரித்துறை அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்போது ஒரு சிலர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பழ.நெடுமாறன், மணியரசன், வேல்முருகன் உள்பட 438 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அனைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒற்றை தீர்ப்பாயம் அமைப்பதென மத்தியஅரசு முடிவு செய்து இருப்பது தமிழக விவசாயிகளை அடியோடு அழிக்கும் செயலாகும். இந்தி தெரியாத மக்களை 2ம் தர குடிமக்களாக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கிறோம். மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருப்பது சிறுபான்மை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். சமூகவிரோதிகள் மீது போடப்பட வேண்டிய குண்டர் சட்டத்தை பொதுநல தொண்டர்கள் மீது போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள திருமுருகன்காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து கைதான அனைவரையும் திருச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.