உலகில் தோன்றிய கவிஞர்கள் படைப்பாளர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒருவரே பல தனிச்சிறப்புகளும், பன்முகத்திறனும் கொண்டவர். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! என்று மூவாத் தமிழ்ப் புகழ் காக்க முழக்கம் செய்து தமிழ் மண்ணில் புதிய சரித்திரம் படைத்தவர் அம்மாபெருங்கவிஞர்.
செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே! என்று பாடி தமிழைத் தனது உயிராய்க் கொண்டு வாழ்ந்தவர் பாரதிதாசன். தனது புரட்சிக் கவிதைகளால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். இவர் புதுவை மாநகரில் கனகசபை-லட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாக 1891-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி பிறந்தார்.
பாரதியார் மீது கொண்ட மதிப்பு காரணமாக தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட அவர், அப்பெருங் கவிஞன் வழியில், முதலில் இந்திய விடுதலைக்குப் பாடிய தேசிய கவிஞராக அதன்பின் தமிழ், தமிழர், திராவிடர் மேன்மைக்காக எழுச்சிக்காக பாடிய தன்மான உணர்ச்சிக் கவிஞராக, பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் கொள்கை வழி பாடும் கவிஞராக வலம் வந்தார். புரட்சிக் கவிஞர், மறுமலர்ச்சி கவிஞர், பாவேந்தர் என்று தமிழ் நாட்டு அறிஞர்களாலும், தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பெற்றவர்.
புரட்சிக்கவிஞர் எழுதிய கவிதைகள், படைப்புகள் ஏராளம். அவை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் என்ற தலைப்பில் 4 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் படைத்த புரட்சியான படைப்புகளாக குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாரா முத்தம், பாண்டியன் பரிசு, குறிஞ்சித் திட்டு, இசையமுது போன்றவை திகழ்கின்றன.
1937-ம் ஆண்டிலேயே தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்து திரைக்கதை, உரையாடல், பாடல்கள் எழுதி முத்திரைப்பதித்தார். முதலில் அவரின் பாண்டியன் பரிசு காப்பியத்தை திரைப்படம் ஆக்கும் நோக்கில் 1961-ம் ஆண்டு பாரதிதாசன் பிக்சர் பட நிறுவனத்தை தொடங்கி செயல்பட்டார். அந்நிறுவனத்தில் அவரின் உதவியாளராக என்னை பணிக்கு அமர்த்தினார். பாவேந்தர் மறையும் நாள் வரை, இறுதி மூச்சு வரை அவரின் உண்மைத் தொண்டனாகத் தொண்டுபுரியும் பேறுபெற்றேன்.
1937-ம் ஆண்டு பாலாமணி அல்லது பக்கா திருடன் என்ற படத்துக்கு பாரதிதாசன் முதன்முதலாக பாடல் எழுதினார். பின்னர் ராமானுஜர் படத்துக்கு முழுப்பாடல்களும், காளமேகம் படத்துக்கு கதை, வசனம், பாடல்களும் எழுதினார். ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்துக்கு திரைக்கதை உரையாடல்களை எழுதினார். அதன் பின்பு வளையாபதி, சுபத்ரா, பொன்முடி போன்ற பல படங்களுக்கும் திரைக்கதை, உரையாடல்களும், பாடல்களும் எழுதி கதை, வசனத் துறையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இளைஞர்களிடம் தமிழ் உணர்ச்சியையும், கவிதை ஆர்வத்தையும் வளர்த்து வழிகாட்டும் நோக்கத்துக்காக குயில் இதழை சென்னையில் இருந்து தொடங்கினார். அதில், சலுகை போனால் போகட்டும் என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட என் தமிழ் விடுதலையாகட்டும் என்பன போன்ற உணர்ச்சிக் கவிதைகள் எழுதி, எழுச்சியூட்டி தமிழர்களுக்கு வழிகாட்டினார் கவிஞர். அனைத்துலக தமிழ் கவிஞர் பெருமன்றத்தை தொடங்கி உலகளாவிய நோக்கோடு கவிதை, இலக்கிய பணியையும் தொடர்ந்தார்.
இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்தபோது கொதித்தெழுந்த பாவேந்தர் நாட்டைக் காக்க பல கவிதைகள் எழுதினார். இன்று அரசு அலுவலகங்களில் ஒளிமுகம் காட்டும் திருவள்ளுவர் படம் உருவாக காரணமானவரே புரட்சி கவிஞர்தான். அவரின் சிந்தனையில் உதித்த உருவத்துக்கு ஓவியர் வேணுகோபால் சர்மா உருவம் கொடுத்தார். முதல்-அமைச்சர் காமராஜரை ஒரு விழாவுக்கு புதுவைக்கு அழைத்து தன் புதுவை இல்லத்தில் திருவள்ளுவர் படத்தை அவருக்கு காட்டி காமராஜரை ஒப்புதல் அளிக்கச் செய்தார் புரட்சிக்கவிஞர். பாரதியார் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியிலும் இறங்கி முழுக்கதை, உரையாடல் எழுதி முடித்தார்.
இப்படி ஓயாமல் உழைத்ததன் விளைவு நெஞ்சுவலிக்கு காரணமாகிறது. உடனே பாவேந்தரை சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கிறோம். 20-4-1964 அன்று அவர் உடல்நிலை தேற மருத்துவர்கள் பல முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
இரவெல்லாம் பாவேந்தரின உயிர்ப் போராட்டம் தொடர்கிறது. காலையில் கண்விழித்து, ஊரிலிருந்து வந்திருந்த மகனுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாவேந்தரின் இன்னுயிர் பிரிகிறது. 21-4-1964 அன்றே, பாவேந்தர் வாழ்ந்த தியாகராயர் நகர் இல்லத்திற்கு அவர் புகழுடல் கொண்டு செல்லப்படுகிறது. நாவலர் நெடுஞ்செழியன், ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசன் உள்பட பல்துறை பெருமக்கள் வருகைதந்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் புதுவைக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டு அவர் இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. 22-4-1964 அன்று காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புதுவை மாநில சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவையின் தலைவர் என்ற பெருமைகளுக்கும் உரியவர் கவிஞர். மாநில முதல்-அமைச்சர் குபேர், அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் அவரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஒரு மைல் நீளமுடைய அந்த ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கு மேலான மக்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சித்தலைவர் சேதுராமன் தலைமையில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், சிலம்புச்செல்வர் மா.பொ.சி, என்.வி.நடராஜன் ஆகியோர் இரங்கல் உரையாற்றுகின்றனர். கலைமேதை டி.கே.சண்முகம் பாவேந்தர் பாடலைப் பாடுகிறார்.
பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் வாழ்த்தி பாவேந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி ஊமையாகி நின்றனர்.
புதியதோர் உலகம் செய்வோம்கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று புத்துலகம் காணப் பாடுபட்டவர் புரட்சிக்கவிஞர்.
பாவேந்தர் மறைந்தாலும், கவிதையின் கலங்கரை விளக்கமாக விளங்கிய அவரின் பாக்கள் வழிக்கொள்கைகள் என்றும் நமக்கு நல்வழி காட்டிக்கொண்டிருக்கும்.
- கவிஞர் பொன்னடியார்