உடல் கருகிய நிலையில் சாவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு இருளர் காலனியில் வசித்து வந்தவர் பழனி (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்கு வீட்டில் இருந்து சென்றார். நேற்று காலை பழனி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் அருகே உள்ள வேலியில் பழனி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் மின்வேலியில் சிக்கி இறந்தவரை இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.