ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது போலீசாரை ஏமாற்றி கைதி தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஏர்வாடி அருகே மடக்கி பிடித்தனர்.
கஞ்சா வழக்கு கைதி
ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் வீடு ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 260 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை மகன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கட்டி முகமது என்ற முகமது மைதீன் (வயது 44) என்பவர் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று கூறி வந்தாராம்.
இந்நிலையில் இவருடன் சேர்த்து மேலும் 3 பேரை நேற்று காலை 3 போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு கைதிகளுக்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டிருக்கும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கட்டி முகமது போலீசாருக்கு தெரியாமல் தப்பி ஓடிவிட்டார்.
மடக்கி பிடித்தனர்
கைதியை காணாததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அங்கும், இங்கும் தேடினர். மலும் அவர்கள் இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து காவல் நிலையத்திற்கும் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் அரசு ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஏர்வாடி அருகே கட்டி முகமது பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த கட்டி முகமதுவை கைது செய்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் கேட்டபோது, தப்பி சென்ற கைதி ஏர்வாடி அருகே பிடிபட்டுள்ளார். கைதியை தப்பவிட்டு கவனக்குறைவாக இருந்த போலீசாரிடம் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இனிவரும் காலங்களில் கைதிகளை அழைத்து செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படும். இவ்வாறு கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் கைதியை தப்பவிட்டதற்காக தலைமை காவலர் ராமபாண்டி, காவலர்கள் திராவிடசெல்வன், அன்பரசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.