திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசன். இவருடைய மகன் முத்தரசன் (வயது19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வருகிறார். முத்தரசன், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி வேறு ஒருவருடன், அந்த பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இந்த தகவல் முத்தரசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்கள் 3 பேருடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற முத்தரசன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அந்த பெண், முத்தரசனிடம், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி விட்டதாகவும், வயதில் சிறியவனாக இருப்பதால் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்றும், தன்னை தொந்தரவு செய்யாதே என்று கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்தரசன், அந்த பெண்ணின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பி சென்றார். இதில் குடல் சரிந்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தரசன், அவருடைய நண்பர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். முத்தரசன் தன்னுடைய வயதுக்கு பொருந்தாத, தன்னை விட மூத்த பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட விபரீத சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.