மங்களூரு,
கடலோர கர்நாடக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே காலை முதல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. காலையில் விட்டுவிட்டு பெய்த மழை, மதியத்திற்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து பெய்ய ஆரம்பித்தது.
குறிப்பாக மங்களூரு நகரில் உள்ள கொட்டாரசவுக்கி, குத்தார்பதவு, தொக்கோடு, எக்கூர், பம்ப்வெல், லால்பாக், சென்டிரல் ரெயில் நிலையம், வாமஞ்சூர், கூலூர், காவூர், சூரத்கல், கிருஷ்ணாபுரா ஆகிய பகுதிகளில் மதியம் தொடங்கிய கனமழை நேற்று இரவு வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் அந்தப்பகுதிகளில் மழைநீர் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழைக்கு இந்தப்பகுதிகளில் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.
கொட்டாரசவுக்கி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மேல் சென்ற வாகனங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சென்றன. ஆனால் பாலத்திற்கு அடியில் சென்ற வாகனங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கங்கனாடி, பிஜய், ஹம்பன்கட்டா பகுதியில் மழை வெள்ள நீரில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.
பம்ப்வெல் பகுதியில் பெய்த கனமழைக்கு அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தபால் நிலையத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகியது. அதேபோல தொக்கொட்டூ பகுதியில் சாலையில் மழைவெள்ளம் தேங்கி நின்றதால் அங்கு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குதார் சந்திப்பு பகுதி ஒரு சிறிய தீவு போல மாறியது. மங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் வீட்டின் மாடிகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. மேலும், தீயணைப்பு படையினர் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பெய்த மழையால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால் மங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் புறப்பட வேண்டிய ரெயில் இரவு 7 மணிக்கு புறப்படும் என்றும், இரவு 10.20 மணிக்கு சென்னைக்கு புறப்படும் மற்றொரு ரெயில் இரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய பல ரெயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல பஜ்பே பகுதியில் பெய்த பலத்த மழையால் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைவெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லால்பாக் பகுதியில் பெய்த மழையால் சாலையின் இருபுறமும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடிந்தது. படில் பகுதியில் சுரங்கப்பாதையில் மழைவெள்ளம் சூழ்ந்துகொண்டதால், ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.
மங்களூரு மட்டும் அல்லாமல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பண்ட்வால், பெல்தங்கடி, புத்தூர், சுள்ளியா ஆகிய தாலுகாக்களில் மழை வெளுத்து வாங்கியது. அந்தப்பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து சாலைகளில் விழுந்த மரங் களை அப்புறப்படுத்தினர்.
கனமழைக்கு தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி, பல்குனி, குமாரதாரா ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். கனமழையால் தட்சிண கன்னடா மாவட்ட மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
மாலையில் கனமழையின் வேகம் குறைந்த பின்னர், மங்களூரு நகரில் மீட்பு பணிகள் தொடங்கின. வீடுகளில் புகுந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டன. சாலையில் சாய்ந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். மங்களூரு நகரை இயல்பு நிலைக்கு திருப்ப மாநகராட்சி ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேப்போல் உடுப்பி மாவட்டத்தில் உடுப்பி, குந்தாப்புரா, கார்கலா, பைந்தூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று காலையிலேயே ஆரம்பித்த மழை இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்தது. அந்த மாவட்டத்தில் உதயாவர், பிரம்மாவர், அம்பலபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 70-க்கும் மேற்பட்ட மரங்களும், 60-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. தொடர் கனமழையால் உதயாவர் பகுதியில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை நின்றபின் மரங்கள், மின்கம்பங்கள் அகற்றும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.
கார்வார் மாவட்டத்திலும் கார்வார், பட்கல், ஒன்னாவர், குமட்டா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. மேலும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் உடுப்பி, கார்வார் மாவட்ட மீனவர்கள் அரபிக்கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். கார்வார் மாவட்டத்திலும் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கடலோர கர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. மங்களூரு நகரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவு மழை பெய்துள்ளதாகவும், இது வரலாறு காணாத மழை என்றும் அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கனமழை காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த கனமழையால் கடலோர கர்நாடக மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கடலோர கர்நாடக மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.