மாவட்ட செய்திகள்

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; சுமைதூக்கும் தொழிலாளி பலி

திருவாடானை அருகே கிரானைட் கற்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமைதூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொண்டி,

மதுரையில் இருந்து கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி எஸ்.பி.பட்டினத்திற்கு சென்றது. லாரியில் 5 சுமைதூக்கும் தொழிலாளர்கள் இருந்தனர். லாரியை டிரைவர் மலைச்சாமி ஒட்டினார். இந்த லாரி நேற்று அதிகாலை திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தின் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த கிரானைட் கற்களுக்குள் சிக்கி மேலூர் அருகே திருவாதாவூர் கிராமத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி(வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி டிரைவர் மலைச்சாமி(22) திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் லாரியில் இருந்த மற்ற சுமைதூக்கும் தொழிலாளர்கள் 4 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்த முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT