ஜீயபுரம்,
திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு என்ற இடத்தில் அகண்ட காவிரி ஆறு கொள்ளிடம், காவிரி என இரண்டாக பிரிந்து செல்கிறது. இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் 1977-ம் ஆண்டு 41 மதகுகள் கொண்ட பாலம் கட்டப்பட்டது.
இந்த 41 மதகுகளில், மதகை ஏற்றி இறக்கக்கூடிய தலா 1 டன் எடையுடைய கவுண்ட்டர் வெயிட் எனப்படும் கான்கிரீட் குறுக்கு கட்டை பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் கதவணை சேதமடைந்ததால், அவற்ற அகற்றிவிட்டு, புதிதாக கதவணை கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் மேலணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், மதகில் உள்ள கான்கிரீட் குறுக்கு கட்டை பலவீனமாக இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், முக்கொம்பு மேலணையில் தொடர் மழையால் 14-வது, 15-வது தூண்களுக்கு இடையே மதகை ஏற்றி இறக்க பயன்படுத்தும் கான்கிரீட் குறுக்கு கட்டை உடைந்து காவிரி ஆற்றில் விழுந்தது. இதன் காரணமாக அந்த மதகை இனி ஏற்றி இறக்க முடியாது.
அதே போல் காவிரிஆற்றின் 34-வது மதகு பகுதியானது காவிரி பாலத்தையொட்டி சுமார் 1 அடி தூரம் விலகியுள்ளது. கடந்த வருடம் முக்கொம்பு மேலணையில் உள்ள மதகுகளை பராமரிப்பதற்கு பல லட்சம் செலவு செய்யப்பட்டு மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு மதகின் குறுக்குச்சட்டம் உடைந்ததால், மற்ற மதகுகளின் குறுக்குச்சட்டம் சரியாக இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கனஅடி நீர் மேலணை வழியாக சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.