மாவட்ட செய்திகள்

தேக்கடி ஏரியில் நீர்மட்டம் குறைந்தது: படகு சவாரி நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தேக்கடி ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் படகுசவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குமுளி,

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, குமுளி, தேக்கடி, மாட்டுப்பட்டி, ராஜமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். இதை அனுபவிப்பதற்காக கேரளா மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக தேக்கடி ஏரியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர். இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு அங்கு படகுசவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் 4 படகுகளும், சுற்றுலாத்துறை சார்பில் 4 படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்தபடி ஏரியின் கரையோரத்தில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை பார்வையிட முடியும்.

இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதையொட்டி தேக்கடி ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் படகு தரை தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேக்கடி ஏரியில் படகுசவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் மழை பெய்யாததால் தேக்கடி ஏரியில் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஏரியின் அடிப்பகுதியில் கட்டைகள் மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன.

படகு இயக்கப்படும் போது தரை தட்டி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன்கருதி படகுசவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே தொடர்ந்து படகு இயக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் ஏற்படும் என்றனர்.

இதற்கிடையில், பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் குடும்பத்துடன் தேக்கடி ஏரிக்கு சுற்றுலா வருகின்றனர். ஆனால் படகுசவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.