மாவட்ட செய்திகள்

தேக்கடியில் வாகன நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலி அகற்றம்

தேக்கடி வாகன நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து அகற்றப்பட்டது.

குமுளி

கேரள மாநிலம் குமுளியை அடுத்து தேக்கடி ஏரி அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இந்தநிலையில் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் அந்த இடம் முல்லைப்பெரியாறு நீர்த்தேக்க பகுதி என்று கூறி தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு வாகன நிறுத்தம் அமைக்கக்கூடாது என்று கூறி குமுளியை சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் என்பவர் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்து கொண்டது.

இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மத்திய தலைமை நில அளவை அலுவலர் சொர்ணசுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி சில நிபந்தனைகளுடன் வாகன நிறுத்தம் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதில், கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது என்றும், வாகனம் மட்டும் நிறுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் ஆனவச்சால் பகுதியில் மூங்கில்வேலி, இருக்கைகளுடன் வாகன நிறுத்தத்தை கேரள வனத்துறையினர் திறந்தனர். இதற்கிடையே கேரள வனத்துறையினர் நிபந்தனைகளை மீறி மூங்கில்வேலி அமைத்துள்ளதாக தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து நிபந்தனைகளை மீறி அமைக்கப்பட்ட வேலியை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து மூங்கில் வேலியை கேரள வனத்துறையினர் அகற்றினர்.

SCROLL FOR NEXT