மாவட்ட செய்திகள்

5-வது நாளாக அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ராமேசுவரம்,

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ராமேசுவரம், அரிச்சல் முனை, தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ராமேசுவரம் பகுதியில் கடல் வழக்கம் போல காணப்பட்டது.

தனுஷ்கோடியில் மட்டும் வழக்கத்தை விட சற்று கூடுதலாக அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் தனுஷ்கோடி செல்ல எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் புதுரோடு பகுதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் கோடை விடுமுறையின் காரணமாக அதிகளவில் வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி பகுதியில் கடல் அலைகளின் வேகம் சற்று அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நேற்று முகுந்தராயர் சத்திரம் வரை அனுமதிக்கப்பட்டனர். அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து நேற்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனாலும் பெரும்பாலானோர் கடலில் இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தனர்.

SCROLL FOR NEXT