கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 170-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். சிலர் சாராயம் காய்ச்சுவது, மரங்கள் வெட்டுவது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனா. இதை தடுக்கும் வகையில் மலைவாழ் கிராம இளைஞர்கள், இளம்பெண்கள் அரசு பணிகளில் சேரவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் அரசு மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வில் கலந்து கொள்ள எதுவாக பயிற்சி வகுப்பு நடத்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் முடிவு செய்தார்.
அதன்படி கல்வராயன்மலை கரியாலூர் போலீஸ் நிலையம் அருகே காவல்துறை சார்பில் மலைவாழ் கிராம இளைஞர்களுக்காக இலவசமாக போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பிலும் 128 பேர் சேர்ந்து ஆர்வத்துடன் அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். மேலும் பயிற்சி வகுப்பில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு குரூப்-4 பாடத்திட்ட குறிப்பேடுகள், புத்தகங்கள், நோட்டுக்கள் இலவசமாக வழங்கி, அகன்ற திரை மூலம் உயர்தர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, காலை, மாலை தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நன்கு அனுபவமுள்ள போட்டித் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கக்கூடிய திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் வாரம் இருமுறை குரூப்-4 மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, இந்திய வரலாறு மற்றும் அறிவியல் வகுப்புகளை நடத்தியதுடன், மாணவர்கள் போட்டித்தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மதிய உணவு பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.