மாவட்ட செய்திகள்

வானவில் : ஹாரியருடன் புத்தாண்டு கணக்கை தொடங்குகிறது டாடா மோட்டார்ஸ்

இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளில் மிகுந்த எதிர்பார்ப்பை சமீப காலத்தில் உருவாக்கிய காராக ஹாரியர் திகழ்கிறது.

இந்த காரை அறிமுகம் செய்வதன் மூலம் தனது புத்தாண்டு (2019) கணக்கை தொடங்க உள்ளது டாடா மோட்டார்ஸ் எஸ்.யு.வி. வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழலில் அந்த இடத்தில் தனது சந்தையை விரிவுப்படுத்திக்கொள்ள ஹாரியரை அறிமுகம் செய்கிறது டாடா மோட்டார்ஸ். இது 2 லிட்டர் என்ஜினைக் கொண்டிருப்பதோடு 140 ஹெச்.பி. திறன் கொண்ட எஸ்.யு.வி. மாடலாக தயாரிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் வரும் இந்த ஹாரியர் கார் 6 கியர்களைக் கொண்டது. விரைவிலேயே இதில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தக் கார் 4,598 மி.மீ. நீளம், 1,894 மி.மீ. அகலம், 1,706 மி.மீ. உயரம் கொண்டதாகவும் 2,741 மி.மீ. விட்டம் கொண்ட சக்கரங்களைக் கொண்டதாகவும் வந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான லேண்ட்ரோவர் மாடல்களில் இருப்பதைப் போன்று மலைப் பகுதிகளில் பயணிக்கும்போது கட்டுப்பாட்டு கருவி செயல்படுவதைப் போன்ற வசதியும் இதில் உள்ளது. அதாவது சாதாரண சாலை, ஈரமான பகுதி, கரடு முரடான சாலைகளில் பயணிப்பதற்கேற்ப தேர்வு பயண நிலைகளை இதில் செய்யலாம். அத்துடன் பன்முக ஓட்டும் வசதிகள் எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட் வசதிகள் இதில் உள்ளன.

இதில் இரட்டை ஸ்கிரீன் வசதி உள்ளது. 8.8 அங்குல இன்போடெயின்மென்ட் திரை, மற்றும் 7 அங்குல எம்.ஐ.டி. டிஜிட்டல் திரை ஆகியன உள்ளன. இதில் ஜே.பி.எல். சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. இது தவிர ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகள் மற்றும் திருப்பங்களில் உறுதியான கண்ட்ரோல் வசதி, மலைப்பகுதிகளில் காரை நிறுத்தும் வசதி, கார் உருண்டால் தடுப்பு வசதி, ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. பின்னிருக்கையில் குழந்தைகளுக்கென ஐசோபிக்ஸ் இருக்கை தரப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி. மற்றும் எக்ஸ்.இஸட். என நான்கு மாடல்கள் வருகின்றன. இப்போது இப்புதிய காரை பிரபலப்படுத்தும் முயற்சியில் சாலை வழி கண்காட்சி ஏற்பாடுகளை டாடா மோட்டார்ஸ் செய்து வருகிறது.