பெங்களூரு,
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிருஷ்ணா நதிநீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் நடுவர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கிருஷ்ணா நதிநீரை கர்நாடகம், மராட்டியம், அகண்ட ஆந்திரா மாநிலம் பங்கிட்டு கொள்ள அனுமதி வழங்கி இருந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு கூறிய பிறகு, மத்திய அரசும் அரசாணை வெளியிட முடிவு எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தெலுங்கானா மாநில அரசு, நடுவர் மன்றத்தில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய ஜலசக்தி மந்திரியான கஜேந்திர சிங் செகாவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தெலுங்கானா மாநிலத்திற்கு கிருஷ்ணா நதிநீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநியாயம் நடந்து விடக்கூடாது என்று, அவரிடம் விளக்கமாக எடுத்து கூறினேன்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிவதற்கு முன்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்புபடியே ஆந்திராவுக்கு வழங்கும் கிருஷ்ணா நதிநீரை தெலுங்கானா பங்கிட்டு கொள்ள வேண்டும். அதனால் நடுவர் மன்றத்தில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து மறுவிசாரணை நடத்த மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட விடமாட்டோம். மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாகவும் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்திடம் பேசினேன். கிருஷ்ணா நதிநீர், மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை காக்கும் விதமாக முதல்-மந்திரி எடியூரப்பாவும், மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.