வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த மண்ணிவாக்கம் விரிவு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கன். இவரது மகன் முகேஷ்குமார் (வயது 13). தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 13-ந்தேதி காலை தனது வீட்டில் வளர்க்கும் நாயுடன் முகேஷ்குமார் நடைபயிற்சி சென்றான். நீண்ட நேரத்துக்கு பிறகு நாய் மட்டும் தனியாக வீட்டுக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் முகேஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடினர். மகன் கிடைக்காததால் இது குறித்து ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆதனூர்- அடையாறு கால்வாய் ஓடையில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். பிணமாக கிடந்தது முகேஷ்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.