மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆலோசனை கூட்டத்தில் சுப்பராயன் எம்.பி.யை அழைக்காதது ஏன்? கலெக்டருக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் சுப்பராயன் எம்.பி.யை அழைக்காதது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த 25ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஆனால் திருப்பூர் சுப்பராயன் எம்.பி.க்கு இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இதுபோன்று நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து கடிதம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, உரிய தகவல் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து சுப்பராயன் எம்.பி. புறக்கணிக்கப்படுகிறார். தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சுப்பராயன் எம்.பி.யை அழைக்காதது ஏன்? என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில், வேலம்பாளைம் சாமிநாதபுரம் விரிவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியின் 1வது மண்டலம் சாமிநாதபுரம் விரிவு பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் இதுவரை சாக்கடை கால்வாய் வசதியோ, வடிகால் வசதியோ ஏற்பத்தி கொடுக்கவில்லை. இதனால் கொசுக்கள் மூலம் தொற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிகளில் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள 60 அடி ரோடு வழியாக அதிக எண்ணிக்கையில் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் அவை எங்கள் பகுதியில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் நாங்கள் குமார் பஸ் நிலையத்தில் இருந்து 1.5 கிலோ மிட்டர் தொலைவு நடந்து சென்று பஸ் ஏறவேண்டிய கட்டாயத்திற்குள் உள்ளோம். இதனால் எங்கள் பகுதியில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பல்லடத்தை சேர்ந்த அனைத்து கட்சியினர் கொடுத்த மனுவில், பல்லடம் நகரின் திருச்சிகோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். மேலும், அருகிலேயே பள்ளி, கல்லூரிகள், நகராட்சி பஸ் நிலையம் உள்ளிட்டவை இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்லடத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி பார்களும் செயல்பட்டு வருகிறது. இதன்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தலித் விடுதலை கட்சியினர் கொடுத்த மனுவில், பல்லடம் அரசு ஆஸ்பத்திரி எதிரே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்து வைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT