மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

நாகர்கோவிலில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாகாகோவில்,

நாகர்கோவிலில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி வெட்டிக் கொலை

நாகர்கோவில் அறுகுவிளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு முருகன் வேலை முடிந்த பிறகு சைக்கிளில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருட்டில் மறைந்திருந்த மர்மஆசாமி திடீரென அரிவாளுடன் ஓடி வந்து, சைக்கிளில் வந்த முருகனை கீழே தள்ளி விட்டு அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

முருகன் சுதாரிப்பதற்குள் வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த தாக்குதலால் பலத்த காயமடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே முருகனை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மது போதையில் தகராறு

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடசோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது.

அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த முத்துராமலிங்கம் (25) என்பவர் முருகனை கொலை செய்தது தெரிய வந்தது. இவர் அறுகுவிளையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி முருகனுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு செல்வாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2 தனிப்படை அமைப்பு

முருகனை கொலை செய்ததும் முத்துராமலிங்கம் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்க வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்கம் குரும்பூரில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளி யாரென்று அடையாளம் தெரிந்ததால் அவரை விரைவில் கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்.