மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வேலை நிறுத்த போராட்டம் வங்கிகள்- காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்பு

பெரம்பலூரில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

பொது வினியோக முறையை முறைப்படுத்தி பலப்படுத்துவது மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை முறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு கழகங்களில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஷேர் ஆட்டோக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

வேலைநிறுத்த போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் பாலக்கரை வழியாக சென்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு நடந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய பொறியாளர் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மறியல் போராட்டம் நடக்கிறது.