மாவட்ட செய்திகள்

உத்தமபாளையம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

உத்தமபாளையம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் சின்னு கூலித்தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த தமிழ்ச்செல்வன், நேற்று தனது நண்பருடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

அங்கு நண்பர்கள் 2 பேரும் குளித்து கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர் அபயகுரல் எழுப்பினார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்த இளைஞர்கள் ஓடி வந்து, குளத்தில் குதித்து தமிழ்ச்செல்வனை மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.