செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது வரலாற்றின் கட்டாயம் கி.வீரமணி பேச்சு

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.

மணப்பாறை,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியம் என்னவென்றால், தமிழகத்தை மீட்க வேண்டும், இந்தியாவை காக்க வேண்டும். யாரிடம் அடகு வைத்தார்கள் என்றால், டெல்லியில் குறைந்த தொகைக்கு மீட்டர் வட்டிக்கு அடகு வைத்து விட்டார்கள். வட நாட்டு தலைவர்கள் நீங்கள் மோடிக்கு வாக்களித்தால் இது தான் கடைசி தேர்தல், இனி தேர்தல் இருக்காது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் ஜனநாயகம் இருக்காது, இனி ஹிட்லரிசம் தான் இருக்கும். ஆகவே தான் சொல்கிறேன். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது வரலாற்றின் கட்டாயம். காலம் அதற்கு இடம் கொடுக்கும். மோடி மீண்டும் பிரதமராக வர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் கடந்த தேர்தலில் பதவிக்கு வந்த போது அவர் பெற்ற வாக்கு 31 சதவீதம் தான். அப்படியென்றால் 100-க்கு 69 பேர் அவர் பிரதமராவதை விரும்பவில்லை. இருப்பினும் அவர் பிரதமர் ஆனார் என்றால் தேர்தல் சட்டத்தில், தேர்தல் முறையில் இருக்கும் கோளாறு தான். இந்த முறை யார் வரவேண்டும் என்பதை விட மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் கோட்டையில் கொத்தடிமை இருக்கும் போது அதை முதலில் ஒழித்தாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.